Search This Blog

Friday, November 26, 2010

தேவதை

எப்போதும் என் வாழ்வில் தேவதைகளுக்கு குறைவில்லை :-) எப்போதோ வந்துபோன ஒரு தேவதையைப்பற்றிய என் நினைவுகள். என் கல்லூரி நாட்களில் எழுதியது உங்கள் பார்வைக்கு..



தென்றலுடன்
பரஸ்பர நலம் விசாரிப்புகளும்
தழுவல்களுமாய் ஆரம்பித்தது
என் காலை  பயணம்..

ஓரிடத்தில் தென்றல் கேட்டது
"தேவதையை பார்த்திருக்கிறாயா?"

"இல்லை" என்றேன்...
"கண்மூடி சுவாசி" என்று கட்டளையிட்டது தென்றல்

கண்மூடி சுவாசித்தேன்
சுவா..சித்..தேன்......

வாசம்!
இனம்புரியாத வாசம்...
தென்றலுடன் மிதந்து வரும் 
தேவதையின் வாசம்...

வாசம் வரும் திசையில்
நடக்க ஆரம்பித்தேன்

ஓரிடத்தில் ஒரு பெண்
பனித்துளியை முத்தமிட்டுக்கொண்டிருந்தாள்?!!
"இவள்தான் தேவதை"
என காதுக்குள் கிசுகிசுத்தது தென்றல்

இதென்ன ஆச்சர்யம்
சூரியன் வந்துதான் பூக்கள் மலரும்
இங்கு நிலவு வந்து பூக்களை எழுப்புகின்றதே??!!

பனித்துளியை
முத்தமிட்டுக்கொண்டிருந்த தேவதை
அரவம் கேட்டு
என் பக்கம் திரும்பினாள்

மின்னல்கள் உருவாகும் இடத்தை
அப்பொழுதுதான் கண்டுபிடித்தேன்

அவள் புன்னகையில் ...

அவள் முன் மண்டியிட்டு
அன்புடன்
அவள் கரங்களில்
முத்தமிட்டேன்

அப்பப்பா,
ஒரு நிலவுக்குள்
இருபது பிறைகளா!!

நான் முத்தமிட்டதால்
கரத்துடன் சேர்ந்து அவள் முகமும் சிவந்தது..
"வரம் கேள்"  "வரம் கேள்" என உசுப்பியது தென்றல்

"என்ன வேண்டும்?" என்றாள்
ஒரு புன்னகையோடு
சுட்டுவிரலால் சுட்டினேன்
நீதான் வேண்டுமென ...

"எனக்கு கடவுளுடன் நிச்சயமாகிவிட்டது "
என்றாள் விரக்தியுடன்

"எப்படி?"

"பெற்றோர் ஏற்பாடு"


அப்போதுதான் தெரிந்து
பல நாத்திகர்கள்
உருவாகும் காரணம்.

கலங்கிய என் விழிகளை கண்டவுடன் கேட்டாள்

"வேறதுவும்?"

"நீ அன்றாடம் முத்தமிடும் பனித்துளியாகவேண்டும் "
"சூரியன் வந்தால் மறைந்து போவாய்"

"உன் பாதம்படும் புற்களாகவாது ?"


"தேவதைகள்  நடந்து வருவதில்லை"

"இந்த மலர்களகவாது?"

"இது நித்தம் வாடுபவை"

"வாடினேன்"

"சரி மறுஜென்மம் வரையில்
இங்கு எங்காவது என்னை புதைத்து விடு
அதற்கு முன்
ஒரே ஒரு முறை
என்னை முத்தமிடு "

அவள் விழிகளில்
இரண்டு சொட்டு கண்ணீர்

மெதுவாக மிதந்து வந்தாள்

கண்மூடி என் இதழோடு

இதழ் பதிக்கும்
நேரத்தில்

"எழுந்திரிடா, நேரமாச்சு"
என்று அம்மாவின் குரல்.
"அடச்சே, கனவு"
என
முனகிக்கொண்டே எழுந்தேன் நான்


ஆனால்
என் அறை முழுவதும்
வாசம்
தேவதையின் வாசம்
தென்றலுடன் மிதந்து வரும் தேவதையின் வாசம்
யாரோ என் காதில் கிசுகிசுத்தார்கள்
"தேவதை"  என